இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின் போது பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.
2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளுக்கான போட்டி அட்டவணையை அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியிட்டிருந்தது.
இதன்படி, டிசம்பர் மாதம் 3ஆம் திகதி முதல் ஜனவரி 07ஆம் திகதி வரை இந்தியா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறவுள்ளது.
அதன் பின்னர் ஜனவரி மாதம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் இரு அணிகளும் பங்கேற்கவுள்ளன.
இந்த நிலையில், இந்தியா மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை நேரில் பார்வையிடுவதற்கு மைதானங்களில் ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
இதற்கமைய, 40 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மைதானத்தில் 25 வீதமான பார்வையாளர்கள் மாத்திரமே அனுமதிக்கப்படவுள்ளதாக அவுஸ்திரேலிய பிரதமர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரின்போது, ஆயிரம் பேர்வரை அனுமதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்த அட்டவணைகள் மாறுதலுக்கு உட்படுத்தப்படலாம் என அவுஸ்திரேலிய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.