அலுத்கமை பகுதியில் சிறுவன் ஒருவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த 25 ஆம் திகதி மாலை இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் அடிப்படையிலேயே, குறித்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்
கடமைக்கு மாறாக செயற்பட்ட காரணத்தினாலேயே, அவர்கள் பணியிடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 25 ஆம் திகதி ஊரடங்குச் சட்டம் அமுல் படுத்தப்பட்டிருந்த நிலையில், மனம் நலம் பாதிக்கப்பட்ட 14 வயதுடைய சிறுவன் ஒருவர் தனது சைக்கிளில் பயணித்துள்ளார்.
இதற்கமைய, குறித்த சிறுவன் பயணித்த சைக்கிள் அம்பகஹ சந்தியில் உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் மோதியுள்ளது.
இதனையடுத்து அங்கு கடமையிலிருந்த பொலிஸாரினால் குறித்த சிறுவன் தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் களுத்துறை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸார் மா அதிபர் மற்றும் களுத்துறை பொலிஸ்பிரிவின் பொலிஸ் அத்தியகட்சகர் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்று வந்தன.
அத்துடன், சிறுவர் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு அரசியல்வாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலரும் கண்டனம் வெளியிட்டிருந்தனர்.
இந்த நிலையிலேயே, சம்பவம் தொடர்பில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது