நாடாளுமன்றத் தேர்தல் திகதி தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை ரத்துசெய்யுமாறுக் கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் தலைமையில், புவனேக அலுவிஹாரே, சிசிர டி அப்ரூ, பிரியந்த ஜயவர்தன மற்றும் விஜித் மலல்கொட ஆகிய நீதியரசர்கள் முன்னிலையில் இன்று இடம்பெற்றது
இந்த நிலையில், மனுக்கள் மீதான விசாரணையில் வாதங்கள் சில முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணைகள் நாளைக் காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன
கடந்த மார்ச் மாதம் 2 ஆம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதுடன், ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தலுக்கான திகதியாக நிர்ணயிக்கப்பட்டு ஜனாதிபதியினால் அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது.
எனினும், நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக பொதுத் தேர்தல் திகதி ஒத்திவைக்கப்பட்டதுடன் புதிய திகதியாக ஜூன் 20ஆம் திகதி குறிப்பிடப்பட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது
இந்த நிலையில், வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் அரசியலமைப்புக்கு முரணான வகையில் அமைந்துள்ளதாகவும், அதன்மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும் குறிப்பிட்டு அடிப்பமை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
முன்னாள் மத்திய மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்னவின் புதல்வர் வழக்கறிஞர் சரித குணரத்ன (Charitha Gunaratne), சமூக செயற்பாட்டாளரான விக்டர் ஐவன், பாக்கியசோதி சரவணமுத்து மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆகியவற்றினால் குறித்த அடிப்படை உரிமை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
குறித்த மனுக்களின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
இந்த நிலையிலேயே, குறித்த மனுக்கள் இன்றைய தினம் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டன.
இதேவேளை. அடிப்படை உரிமை மனுக்களுக்கான கால அவகாசத்தை பூர்த்தி செய்யாத காரணத்தினால் மனுக்களை தொடர முடியாது என மன்றில் அறிவிக்கப்பட்டுள்ளது
சட்டமா அதிபர் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திகா டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மனுவில் ஜனாதிபதியின் செயல்பாடுகள் குறிப்பிடப்படுகையில், ஒரு மனுவில் ஜனாதிபதியின் பெயர் பிரதிவாதியாக பெயரிப்படவில்லை எனவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் இந்திகா டி சில்வா மேலும் குறிப்பிட்டுள்ளர்
இதேவேளை, குறித்த வழக்கில் ஆஜராகியிருந்த சட்டத்தரணிகளான சுமந்திரன் மற்றும் மைத்திரி குணரத்ன ஆகியோர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்துத் தெரிவித்திருந்தனர்.