பொருளாதார மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, சீமேந்து, இரும்பு உள்ளிட்ட கட்டட நிர்மாணப் பணிகளுக்குத் தேவையான மூலப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்படி, இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான உத்தரவை ஜனாதிபதி செயலாளர் பீ.பி ஜயசுந்தர இலங்கை சுங்கத்திற்கு நேற்றைய தினம் அனுப்பிவைத்துள்ளார்.
துறைமுகம் உள்ளிட்ட நாட்டில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களுக்கு தேவையான சீமெந்து மற்றும் இரும்பு உள்ளிட்ட மூலப் பொருட்களை தட்டுப்பாடின்றி விநியோகிப்பதற்கான தேவைக்கு அமைய, இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி செயலாளரினால் விடுக்கப்பட்டுள்ள உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முழுமையான அனுமதியின் கீழ் இறக்குமதி செய்யப்படும் சீமேந்து, இரும்பு, பிளாஸ்ட்டிக் ஆகியவற்றுக்கான உற்பத்தி மூலப் பொருள் உள்ளிட்ட பல பொருட்களை உரிய வரியின் கீழ் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை, விசேட வர்த்தக வரியின் கீழ் உணவுப் பொருட்கள் மற்றும் பழங்கள் உள்ளிட்ட உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படாத விவசாயப் பொருட்களுக்கு இந்த நடவடிக்கையின் கீழ், இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், கட்டுப்பாடுகளின் கீழ் PALM oil இறககுமதிக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது