பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்ட வர்த்தமானியை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனு சட்டத்தரணி சரித குணரத்னவினால் உயர்நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவின் பிரதிவாதிகளாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய மற்றும் அதன் உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி என்.ஜே அபேசேகர, பேராசிரியர் ரத்னஜீவன் ஹுல் மற்றும் ஜனாதிபதி செயலாளர் பேராசிரியர் பி.பி ஜயசுந்தர, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த தேர்தலை எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் எடுக்கப்பட்ட தீர்மானம் அரசியலமைப்புக்கு முரணானது என மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசியலமைப்பின் பிரகாரம், ஜனாதிபதியினால் கடந்த மார்ச் மாதம் இரண்டாம் திகதி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட நிலையில் கலைக்கப்பட்ட தினத்திலிருந்து மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என குறித்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், வேட்பு மனுக்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் தினத்திலிருந்து, ஐந்து மற்றும் ஏழு வாரங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும் என, நாடாளுமன்ற தேர்தல் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய, பொதுத் தேர்தலை மே மாதம் 13 ஆம் திகதிக்கு முன்னர் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடமைப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தாக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் சந்தேகத்திற்கிடமான நபர்களை 14 அல்லது 21 நாட்கள் தனிமைப்படுத்தல் வைக்க வேண்டும் எனவும் இதனால் நாட்டில் சுயாதீனமானதும், நியாயமானதுமான தேர்தலொன்ற நடத்துவதற்கு இடையூறு ஏற்படுவதாகவும் மனுதாரர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, திகதி தேர்தலகள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியின் ஊடாக அடிப்படை உரிமை மீறப்படுவதாக கூறி உத்தரவொன்றப் பிறப்பிக்குமாறு மனுதாரர் கேட்டுக் கொண்டுள்ளார்.
அத்துடன், தம்மால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணை நிறைவடையும் வரை, தேர்தல் நடத்துவதற்கு இடைக்கால தடையுத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானியை செல்லுபடிற்றதாக்குமாறும் மனுதாரர் கேட்டுக் கொண்டுள்ளார்.