நாட்டில் நான்காயிரத்து 665 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, அவர்கள் 36 தனிமைப்படுத்தல் நிலையங்களில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவத்தின் கண்காணிப்பின் கீழ் 25 நிலையங்களும், கடற்படையின் கீழ் ஆறு நிலையங்களும், விமானப் படையின் கண்காணிப்பின் கீழ் நான்கு தனிமைப்படுத்தல் நிலையங்களும் வழிநடத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா கூறியுள்ளார்.
இதேவேளை, வவுனியா, மகா கச்சகொடி கிராமத்தில் சுய தனிமைப்படுத்தப்பட்டிருந்த 21 குடும்பங்கள் நேற்றைய தினம் சுகாதார திணைக்களத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றும் வவுனியா, மகா கச்சகொடி பகுதியைச் சேர்ந்த ஒருவர், அண்மையில் விடுமுறைக்காக வருகை தந்திருந்த நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, குறித்த கடற்படை வீரரின் மகா கச்சகொடி கிராமம் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மகா கச்சகொடி பகுதியில் கடற்படை வீரருடன் தொடர்பினை வைத்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பீ. சீ.ஆர் பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே, சுய தனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டிருந்த 21 குடும்பங்கள் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
அத்துடன், குறித்த கடற்படை வீரருடன் தொடர்பை பேணியதாக பம்பைமடுவில் தங்கவைக்கப்பட்டுள்ள 9 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனை முடிவுகளும் வெளியாகியுள்ளன.
இதற்கமைய, அவர்களுக்கும் கொரோனா தொற்று இல்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மகா கச்சகொடி கிராமம் தவிர குறித்த கடற்படை வீரர் சென்ற வர்த்தக நிலையங்கள், காப்புறுதி நிறுவனங்கள், அரச திணைக்களங்கள் என்பவற்றைச் சேர்ந்த 115 பேர் தொடர்ந்தும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கொழும்பிலிருந்து மலையத்திற்கு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த 200 பேர் தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
இதற்கமைய, 14 நாட்கள் தனிமைப்படுத்தலின் பின்னர், லிந்துலை பொது சுகாதார பரிசோதகர் பிரிவினால் நேற்றைய தினம் அவர்கள் அனுப்பிவைக்கப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
லிந்துலை, அக்கரப்பத்தனை மற்றும் டயகம ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பிரதேசங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
எனினும், விடுவிக்கப்பட்ட அனைவரையும் மீண்டும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, தேவையேற்படின் மேலும் சில தினங்களுக்கு தனிமைப்படுத்த வேண்டிய நிலைமை ஏற்படலாம் எனவும் லிந்துலை பொது சுகாதார பரிசோதகர் பிரிவு குறிப்பிட்டுள்ளது