கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பதற்கு தயாராக உள்ளதாக சீனா அறிவித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பாக சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “சர்வதேச சமூகத்துடன் இணைந்து கொரோனா வைரஸ் தொடர்பான அனைத்து ஆராய்ச்சிகளுக்கும் சீனா தனது பங்களிப்பினை முழுமையாக வழங்கும்.
குறித்த ஆய்வு செயல்முறைகள் தொழில்முறையில் அமைய வேண்டும். குறித்த செயற்பாடுகளில் அரசியலை தவிர்க்க வேண்டும்.
மேலும், இந்த ஆய்வின்போது, அனைத்து நாடுகளின் இறையாண்மையையும் மதிக்க வேண்டும். ஆய்வுக்கு முன்பாகவே குற்றச்சாட்டு சுமத்துவதை சீனா எதிர்க்கிறது.
இந்த விடயத்தில் அமெரிக்க அரசியல்வாதிகள் அடிப்படை உண்மைகளை கவனிக்காமல், பல தவறான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.
அத்துடன் அவர்கள் பல சதித்திட்டங்களையும் நடைமுறைப்படுத்துவதற்கு முயற்சிக்கின்றார்கள். கொரோனா வைரஸ் விவகாரத்தில் சீனாவுக்கு எதிராக ஆதாரம் இன்றி வழக்கு தொடுக்கிறார்கள்.
விலை மதிக்க முடியாத பல உயிர்களை கொரோனா வைரஸ் கொன்றுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட நாடுகள் புவியியல், இனம், வரலாறு, கலாசாரம், சமூகக்கட்டமைப்பு உள்ளிட்டவற்றை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும்.
மேலும் உலக சுகாதார நிறுவனத்தை குறைகூறுவதை விடுத்து அதற்கு ஆதரவு அளிக்கும் நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும்” என சீனாவின் வெளிவிவகார அமைச்சர் வாங் யீ மேலும் குறிப்பிட்டார்.