நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாடளாவிய ரீதியில் 6 ஆயிரத்து 219 குடும்பங்களைச் சேர்ந்த 23 ஆயிரத்து 589 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் வெளியிட்டுள்ள விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், அனர்த்தங்களினால் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், 117 குடும்பங்களை சேர்ந்த 248 பேர், தெரிவுசெய்யப்பட்ட 29 பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த நாட்களில் ஏற்பட்ட அனர்த்தங்களினால் 29 வீடுகள் முழுமையாகவும், 2 ஆயிரத்து 729 வீடுகள் பகுதி அளவிலும் சேதமடைந்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இதேவேளை, இரத்தினபுரி மாவட்டத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் 5 ஆயிரத்து 5 குடும்பங்களை சேர்ந்த 18ஆயிரத்து 959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், கண்டி மாவட்டத்தில் 152 குடும்பங்களை சேர்ந்த 657 பேரும், நுவரெலியா மாவட்டத்தில் 285 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 127 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மாத்தறை மாவட்டத்தில் 220 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 910 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.