இலங்கையில் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த அரசாங்கம் முன்வர வேண்டும் என கனேடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாட்டில் 11 ஆண்டு யுத்த வெற்றியினை அரசாங்கம் நினைவு கூர்ந்து வரும் நிலையிலேயே கனடாவின் இந்த அறிவிப்பு வௌியாகியுள்ளது.
அத்துடன் இந்த நாளில் போரில் உயிர் நீத்தவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்ககளை தாம் நினைவு கூறுவதாகவும் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவித்துள்ளார்.
இன்றைய தினத்தில் போரின் போது காணாமல் போனவர்கள் ,வீடுகள் மற்றும் சமூகங்களிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் மற்றும் போரில் காயமடைந்தவர்களையும் தாம் நினைவு கூறுவதாக கனேடியப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த காலத்தில் கற்றுக் கொண்ட விடயங்களை எதிர்காலத்தை உருவாக்குவதற்கு பயன்படுத்த வேண்டும் எனவும் இலங்கை அரசாங்கம் அர்த்தமுள்ள பொறுப்புக்கூறல் செயன்முறையை முன்னெடுக்க முன்வர வேண்டும் என கனேடிய பிரதமர் கூறியுள்ளார்.
அத்துடன் இலங்கையில் நீதி,நல்லிணக்கம் மற்றும் நீண்ட நாள் சமாதானத்திற்காய் பாடுபடும் அனைவருக்கும் கனேடிய அரசாங்கம் தொடர்ந்தும் தமது ஆதரவை வௌிப்படுத்தி வருவதாக அவர் மேலும் கூறியுள்ளார்.