இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை எதிர்வரும் 31ஆம் திகதிக்குப் பின்னர் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் உள்ளிட்ட போட்டிகளை நடத்துவது மற்றும் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பான முடிவுகளை அறிவிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் அமுல்படுத்தப்பட்டுள்ள முடக்க நடவடிக்கை இந்த மாதம் 31ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இருப்பினும், புதிதாக சில தளர்வுகளை வழங்கியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, விளையாட்டு அரங்குகள், மைதானங்களைத் திறப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன், மைதானங்களுக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் அறிவித்துள்ள மத்திய அரசு, மக்கள் நடமாட்டத்திற்கு இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை தடை வித்திக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்துக்கான தடை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, உள்நாட்டு விமானப் போக்குவரத்து மற்றும் இரவு நேரத்தில் மக்கள் நடமாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையால் போட்டிகளை உடனடியாக ஆரம்பிப்பிக்க முடியாது எனவும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளது.
அத்துடன், அடுத்த கட்டத் தளர்வுகளுக்குப் பின்னர் விளையாட்டுப் போட்டிகளை மீண்டும் நடத்துவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளது.
இதேவேளை, உள்நாட்டு வீரர்கள் தங்களது பகுதிகளில் உள்ள மைதானங்களில் பயிற்சிகளை மேற்கொள்வார்கள் என்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.