கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, அடுத்த 6 மாதங்களில் உலகளாவிய ரீதியில் 12 இலட்சம் குழந்தைகள் உயிரிழக்கக் கூடும் என ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெப் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் ப்ளூம்பெர்க் பாடசாலை பொது சுகாதார நிறுவனத்தின் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த ஆய்வில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தெற்காசியாவில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் குழந்தை பிறப்பு, குழந்தைகள் பாதுகாப்பு, நோய்த் தடுப்பு, குடும்பக் கட்டுப்பாடு ஆகியவற்றில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், பல நாடுகளில் பாடசாலைகள் மூலமாக குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதாகவும், தற்போது பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதால் முறையாக உணவின்றி அவர்கள் தவிப்பதாகவும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஊட்டச்சத்து கிடைக்காமல் குழந்தைகள் பெரும் அபாயத்தை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த நிலையில், எதிர்வரும் 6 மாதங்களில், 5 வயதிற்குட்பட்ட 12 இலட்சம் குழந்தைகள் வழமைக்கு மாறாக உயிரிழக்கும் அபாயம் உள்ளதாகவும் யுனிசெப் அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.