நாட்டின் பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்டு செயற்படும்போது, பொருத்தமற்ற சட்ட விதிமுறைகள் அவற்றுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் துறையில் எதிர்நோக்கப்படும் நீண்டகால பிரச்சினைகளுக்கு தீர்வினை முன்வைக்கும் நோக்கில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ,ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள், நிறுவனத் தலைவர்கள், அமைச்சர் ரமேஷ் பத்திரண, ஆகியோருக்கிடையில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது
இந்த சந்திப்பின் போது கருத்துரைக்கையில் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அரச மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களில் காணப்படும் பிரச்சினைகள், சட்டத்தின் ஊடாக அல்லாமல், கலந்துரையாடலின் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
திறைசேரிக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில் அரச நிறுவனங்கள் நடாத்தப்பட வேண்டும் எனவும், அதற்கான ஒரு திட்டத்தை குறுகிய காலத்தில் செயற்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் கொள்கைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப செயற்படுவதன் மூலம் பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என அவர் தெரிவித்தார்.
அரசாங்கம் சரியான ஒரு கொள்கை முடிவை எடுக்கும் போது, அனைத்து அரச நிறுவனங்களும் அதனை கடைபிடிக்க வேண்டும் எனவும், சரியானதைச் செய்வதற்கு எந்தவிதமான தடைகளையும் ஏற்படுத்த முடியாது எனவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேவேளை, அரச அதிகாரி ஒருவரின் பொறுப்பானது பிரச்சினைகளுக்கான தீர்வினை முன்வைப்பதை தவிர புறக்கணிப்பது அல்ல எனவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், நாட்டின் பொருளாதாரத்துக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ள எத்தனோல் இறக்குமதியை நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி, எந்தவொரு தனியார் தொழிலதிபர்களினதும் அழுத்தங்களுக்கு அடிபணிந்து தனமு முடிவை மாற்றப் போவதில்லை எனவும் கூறியுள்ளார்.
அரச துணை நிறுவனங்களின் பிரச்சினைகள் பேச்சுவார்த்தை மட்டத்தில் தீர்க்கப்படாமல், நீதிமன்ற நடவடிக்கைகளை முன்னெடுத்தமை குறித்து ஜனாதிபதியிடம் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை, காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 800 வழக்குகளில், அவற்றில் 300 வழக்குகள் பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு (වැවිලි සමාගම්) எதிரானவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, அரச நிறுவனங்களுக்கு இடையிலான சிக்கல்களுக்கு லந்துரையாடல்களின் மூலம் தீர்வினை பெற்றுக்கொள்ளுமாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.