அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பணிகளை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் வகையிலும் அத்தியாவசிய சேவைகளை முறையாக முன்னெடுத்துச் செல்வதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள ரயில் மற்றும் பேருந்து சேவையில் மேலும் சில வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதற்கமைய, ரயில் பயணிகளுக்கு நேற்று முதல் பருவச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதுடன், ரயில் பயணிகளுக்கான பயணச்சீட்டும்
வழங்கப்பட்டுள்ளன.
இதன்படி, பயணச்சீட்டுகளை பெறுவதற்காக பயணிகள் தமது நிறுவனங்கள் மூலம் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டையை சமர்ப்பித்து பயணச்சீட்டுகளை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்படுகிறது.
இருப்பினும் பொதுமக்கள் அனாவசியமான பயணங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டுமென அமைச்சர் மஹிந்த அமரவீர கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ள கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களிலும் அரச மற்றும் தனியார் பேருந்துகள் மற்றும் ரயில்கள் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டுமெனவும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், வெளி பிரதேசங்களிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்காக விசேட பேருந்து மற்றும் ரயில் சேவைகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.