கொழும்பில் சேரி புறங்களில் வசிப்பவர்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டமொன்றை நகர அபிவிருத்தி அதிகாரசபை ஆரம்பித்துள்ளது.
குறித்தி வீட்டுத்திட்டத்தின் முதல் கட்டப்பணிகள் இன்று காலை 10 மணிக்கு மத்திய கொழும்பு பகுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் அறிவுறுத்தலுக்கு அமைய இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இன்றைய தினம் கொழும்பு 14 இற்கு உட்பட்ட ஶ்ரீமாவோ பண்டாரநாயக்க மாவத்தை, எதிரிசிங்க மாவத்தை சிறிமுது உயன பகுதியை அண்மித்த பகுதியில் ஆயிரம் வீடுகளைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புத் தொகுதி நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படுகின்றன.
குறித்த வீடுகள் 550 சதுர அளவைக் கொண்டிருக்குமென நகர அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன், குறித்த வீட்டுத்திட்டத்திற்கென 5 ஆயிரத்து 950 மில்லியன் ரூபா செலவாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இன்று ஆரம்பிக்கப்படும் இந்த வீட்டுத்திட்ட கட்டுமானப் பணிகள் எதிர்வரும் 3 ஆண்டுகளுக்குள் நிறைவடையும் என நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கொழும்பில் சேரிப்புறங்களில் வாழ்பவர்களுக்காக 60 ஆயிரம் தொடர்மாடி குடியிருப்புகளை அமைக்கும் பணி தற்போதைய ஜனாதிபதி நகர அபிவிருத்து அமைச்சின் செயலாளராக இருந்தபோது ஆரம்பிக்கப்பட்டது.
இந்த திட்டத்திற்கமைய, 12 ஆயிரத்து 500 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 3 ஆயிரம் வீடுகள் அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையிலேயே, தற்போது கொழும்பு, வடகொழும்பு, பொரளை மற்றும் தெமட்டகொடை உள்ளிட்ட பகுதிகளில் 50 ஆயிரம் வீடுகளை அமைப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.