தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ள நிலையில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள சுமார் 448 இலங்கையர்கள் நாளைய தினம் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாயப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு உறவுகள், திறன் மேம்பாடு, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் உறவுகள் அமைச்சர் தினேஷ் குணவர்தன வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தவிடம் இது தொடர்பில் அறிவுறுத்தியுள்ளதாகம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் குவைட் நாட்டில் உள்ள இலங்கைத் தூதரகம் ஊடாக குறித்த இலங்கைப் பிரஜைகளை நாட்டிற்கு அழைத்துவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவர்களுள் சுமார் 65 பேர் குவைட் நாட்டில் உள்ள தடுப்பு நிலையங்களில் தங்கியுள்ளதாகவும் , ஏனைய 383 பேர் வீசா அனுமதி காலாவதியாகியுள்ள நிலையில் குவைட் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பொதுமன்னிப்பு காலத்தின் ஊடாக நாடு திரும்புவதற்கு எதிர்ப்பார்த்துள்ள இலங்கையர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையமூடாக நாட்டிற்கு அழைத்தவரப்படும் அனைவரும் கிருமி ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவதுடன் முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளனர்.
குவைட் நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்தின் நடவடிக்கைகளின் ஊடாக குவைட் அரசாங்க அதிகாரிகளுடன் முன்னெடுக்கப்பட்ட கலந்துரையாடலின் எடுக்கப்பட்ட தீர்மானங்களுக்கமைய இலங்கைப் பிரஜைகள் நாட்டிற்கு அழைத்துவரப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.