தற்போதைய சூழ்நிலையில், அவசியமான தேவைகள் தவிர்ந்த நோக்கங்களுக்காக நாடு திரும்புவது குறித்து சிந்தித்து செயற்படுமாறு வெளிநாடுவாழ் இலங்கையர்களிடம் வெளியுறவு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
நாடு திரும்புவதற்காக வெளியுறவு அமைச்சிடம் இதுவரை முன்வைக்கப்பட்டுள்ள 38ஆயிரம் பேரில் 28 ஆயிரம் பேர் வெளிநாட்டு தொழிலாளர்கள் என வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன், வெளிநாட்டு தொழிலாளர்களில் குறிப்பாக, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக தங்கியுள்ள தொழிலாளர்களை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு முன்னுரிமை அளித்து செயற்பட உள்ளதாக வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்கள் வெளிநாடுகளில் சட்ட விரோதமாக தங்கியுள்ளமையினால் மருத்துவ வசதிகளை பெற்றுக் கொள்ள முடியாத நிலை காணப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் சட்ட ரீதியான தொழில் புரியும், கொரோனா தாக்கத்தினால் பாதிப்பை எதிர்நோக்கக் கூடிய தொழிலாளர்களுக்கும் முன்னுரிமை அளிக்கத் தீர்மானித்துள்ளதாக வெளியுறவு அமைச்சு கூறுகின்றது.
அத்துடன், இந்த சந்தர்ப்பத்தில் நாடு திரும்புவதால், தமது தொழிலுக்கோ அல்லது கல்வி நடவடிக்கைகளுக்கோ ஏற்படக் கூடிய பாதிப்பு குறித்தும் சிந்தித்து செயற்படுமாறு வெளிநாடுவாழ் இலங்கையர்களிடம் வெளியுறவு அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
மட்டுப்படுத்தப்பட்ட விமானங்கள் மட்டுமே இயக்கப்படும் இத்தகைய ஒரு காலப்பகுதியில், குறுகிய கால பயணம் ஒன்றை நோக்காகக் கொண்டு நாடு திரும்புவது பொருத்தமற்றது எனவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை, வெளிநாட்டில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரும் அனைவரும் 21 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் எனவும் வெளியுறவ அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.