வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ். சார்ள்ஸ், மூன்று மாத மருத்துவ விடுமுறைக் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன,
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிற்கு அனுப்பியுள்ள கடிதமொன்றின் மூலமே இந்த அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த மாதம் முதலாம் திகதி முதல் எதிர்வரும் வரும் மூன்று மாதங்களுக்கு அவர் இந்த விடுமுறையைக் கோரியுள்ளதாக கூறப்பட்டுள்ளது,
அத்துடன், ஆளுநரின் பணிகளை ஒழுங்குபடுத்தி நிர்வாகத்தை முன்னெடுக்க வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் ஆகியோரைக் கொண்ட குழுவை அனுமதிக்குமாறும் ஆளுநர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது,
எவ்வாறாயினும் வேறொரு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண பதில் ஆளுநராக மூன்று மாதங்களுக்கு நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ், அண்மைக்காலமாக கொழும்பிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திலிருந்தே பணிகளை முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.