மத்திய மாகாணத்தில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கதின் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
எனவே குறித்த நீர்த் தேக்கத்தினை அண்மித்து வாழும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு பொல்கொல்ல நீர்த்தேக்கத்தின்ன் செயற்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல்வேறு பிரதேசங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், காற்றுடன் கூடிய மழை காரணமாக ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ் காசல்றீ பகுதியில் உள்ள தொலைத் தொடர்பு கம்பம் சேதமடைந்துள்ளது.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
இதன் காரணமாக ஹட்டன் – நோட்டன் பிரிட்ஜ் பிரதான வீதியின் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் ஹட்டன், ஒஸ்போன், நோட்டன், லக்சபான ஆகிய பகுதிகளுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த நிலையில் சேதமடைந்துள்ள தொலைத் தொடர்பு கம்பத்தினை அகற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதேவேளை, காலி மாவட்டத்தில் நேற்று வீசிய கடும் காற்று காரணமாக சேதமடைந்த வீடுகளை புனரமைக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
அத்துடன், காலி மாவட்டத்துக்கு உட்பட்ட எல்பிட்டிய வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் 37 வீடுகள் , எல்பிட்டிய கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வீடொன்று உட்பட அட்டகோட்டே பிரதேச செயலாளர் பிரிவில் 5 வீடுகள் மற்றம் எல்பிட்டிய மத்திய பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள வீடொன்றும் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
காலி மாவட்டத்தில் உள்ள , இரண்டு வியாபார நிலையங்கள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.