தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமையின் அடிப்படையில் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழ்நிலை காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பான நடவடிக்கைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ள அறிவுறுத்தலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
அத்துடன், கொரோனா வைரஸ் பரவலின் நிலைமை மற்றும் பாடசாலைகளில் மேற்கொள்ளப்படும் சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியன தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, எதிர்வரும் 11ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பாடசாலை கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன், எதிர்வரும் 11ஆம் திகதி முதல் நாட்டின் செயற்பாடுகளை வழமைக்குக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், அதற்கான சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளது.
எனினும், பாடசாலைகளை மீள ஆரம்பிக்கும் தினம் தொடர்பிலான இறுதி முடிவு கல்வி அமைச்சினால் இதுவரை அறிவிக்கப்படவில்லை.
இந்த நிலையில், எதிர்வரும் வாரங்களில் பாடசாலை சுற்றாடலில் கொரோனா பரவலை தடுக்கும் வகையிலான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் மற்றும் அதற்கான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் தொடர்பில் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், பாடசாலைகள் திறக்கப்படும் சந்தர்ப்பத்தில் மாணவர்கள் முகம்கொடுக்கக்கூடிய சிக்கல்கள் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோருடன் கலந்துரையாட சுகாதார அமைச்சு எதிர்பார்த்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பில் தேசிய மட்டத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை, மாகாண மட்டத்தில் கலந்துரையாடி தீர்மானங்களை மேற்கொள்ளும் அதிகாரம் மாகாண மட்ட குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.