நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 925 ஆக காணப்படுகின்றது.
சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோய் தடுப்புப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரொனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 445 ஆக காணப்படுகின்றது.
இந்த நிலையில், 471 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கமைய, தேசிய தொற்று நோய் வைத்தியசாலை, வெலிக்கந்த ஆதார வைத்தியசாலை, கொழும்பு கிழக்கு ஆதாரவைத்தியசாலை, இரணவில வைத்தியசாலை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, ஹோமாகம ஆதாரவைத்தியசாலை மற்றும் இராணுவ வைத்தியசாலை ஆகியவற்றில் கொரோனா தொற்று காரணமாக இதுவரை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாட்டில் 39 ஆயிரத்து 629 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 14 ஆம் திகதி யாழ்ப்பாணம் மாநகரசபை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 6 பேருக்கு கொரோனா தொற்று தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், அவர்களில் 5 பேருக்கு கொரோனா தொற்றின் தாக்கம் இன்னமும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்படி, குறித்த ஐந்து பேரும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று இரண்டு வாரங்களுக்கு முன்னரே வீடு திரும்பியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
குறித்த ஐவரும் அரியாலை பகுதியை சேர்ந்தவர்கள் என பணிப்பாளர் சத்தியமூர்த்தி சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த ஐந்து பேரும் தொடர்ந்தும் இரண்டு வாரங்களுக்கு தங்களது வீடுகளிலேயே சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
இவாறு சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் ஐவரும் இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மீண்டும் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்துமாறு நோய் தொற்று தடுப்பு நிபுணர்கள் அறிவித்துள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.