நாட்டில் தொடர்ந்துவரும் மழையுடனான வானிலையினைத் தொடர்ந்து இரத்தினபுரி மாவட்டத்திற்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, இரத்தினபுரி, எலபாத, கலவான மற்றும் கிரியெல்ல ஆகிய பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் உள்ளது.
இதன்படி, குறித்த பகுதிகளில் வாழும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறு இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இரத்தினபுரி மாவட்டத்தின் ஓப்பநாயக்க, பலாங்கொடை, எகலியகொடை, பெல்மடுல்ல மற்றும் நிவித்திகல ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த இரண்டாம் கட்ட செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும், மற்றும் எல்பிட்டிய, கொடக்கவெல, இம்புல்பே, கஹவத்த, கொலன்ன மற்றும் வெலிகாபொல் ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, காலி மாவட்டத்தின் பத்தேகம, நெலுவ மற்றும் தவலம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும், அக்மீமன, எல்பிட்டிய, நாகொட, போத்தலை மற்றும் நியகம பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள மஞ்சல் நிற அபாய எச்சரிக்கையும் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
கேகாலை மாவட்டத்தின் தெரனியகலை, புளத்கொஹுபிட்டிய, வறக்காபொலை, றம்புக்கண, கலிகமுவ, கேகாலை மற்றும் தெஹியோவிட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும் செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும், அரநாயக்க மற்றும் யட்டியாந்தோட்டை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், குருநாகல் மாவட்டத்தின் மாவத்தகம மற்றும் பொல்கஹவெல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கும், கொழும்பு மாவட்டத்தின் சீதாவாக்கை பிரதேச செயலக பிரிவிக்கும், மாத்தளை மாவட்டத்தின் உடுவெல பிரதேச செயலக பிரிவிக்கும் மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ கோரளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும், கொத்தமலை பிரதேச செயலாளர் பிரிவுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், களுத்தறை மாவட்டத்தின் அகலவத்த, பாலிந்தநுவர, வலல்லாவிட்ட, புலத் சிங்ஹல மற்றும் இங்கிரிய ஆகிய பிரதேச செயலாக பிரிவுகளுக்கு செம்மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும், ஹொரண மற்றும் மத்துகமை ஆகிய பிரதேச செயலக பிரிவுகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை மாவட்டத்தின் பிட்டபெத்தர, கொடபொல ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு செம்மஞ்சல் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கண்டி மாவட்டத்தின் கங்க இகல கோரல, தும்பனை, கண்டிப்பட்டினம், கங்கவட்ட கோரல மற்றும் பாத்தஹேவாஹெட்ட ஆகிய பிரதேச செயலப் பிரிவுகளுக்கு மஞ்சள் நிற மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக , மலைப்பாங்கான பிரதேசங்கள் மற்றும் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வாழும் பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு இடர்முகாமைத்து மத்திய நிலையம் கோரிக்கை விடுத்துள்ளது.
மேலும், மண்சரிவு, மண்மேடு சரிந்து விழுதல், கற்பாறைகள் சரிதல், வெள்ளம், சுவர்களில் வெடிப்பு, நிலம் தாழ் இறங்குதல், நிலத்தில் வெடிப்பு ஏற்படுதல் மற்றும் மரங்கள் முறிந்து விழுதல் உள்ளிட்ட அனர்த்தங்கள் குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, அனர்த்தங்கள் ஏற்படும் சந்தர்ப்பங்களில் அது தொடர்பாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் 117 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற வானிலை காரணமாக ஏற்படும் பாதிப்புகளில் இருந்து மக்களை பாதுகாக்கும் வகையில், முப்படையினர் மற்றும் பொலிஸார் தயார் நிலையில் இருப்பதாகவும் இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.