நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண நிலைமையில் புதிய கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிப்பது போன்ற பாரிய உட்கட்டமைப்பு திட்டங்கள் அவசியமற்றவை என பிரதமர் மகிந்த ராஜபக்சவினது புதல்வர் யோசித ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.
தனது டுவிட்டர் பக்கத்திலேயே இவ்விடயத்தினைப் பதிவேற்றியுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில்,
புதிய கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிப்பது எமக்குப் பெருமை மற்றும் மகிழ்ச்சியான விடயமாகும்.
ஆனால் தற்போது நாட்டில் நிலவும் நோய்த் தொற்றுக் காரணமாக எழுந்துள்ள சுகாதார நெருக்கடியைக் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே புதிய கிரிக்கெட் மைதானத்தை நிர்மாணிப்பது போன்ற பெரிய உட்கட்டமைப்புத் திட்டங்கள் காலத்தின் தேவை அல்ல என்று நான் தனிப்பட்ட முறையில் உணர்கிறேன்.
ஆகவே இந்த திட்டங்களை பின்னர் கவனிக்க முடியும், இப்போதே போதுமான நிதி இருந்தால், உள்கட்டமைப்பு இல்லாத பகுதிகளில் புதிய திட்டங்களை தொடங்குவதன் மூலம் விளையாட்டை மேலும் மேம்படுத்துவதை இலங்கைக் கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கவனிக்க வேண்டும். தற்காலிக முடிவுகள் எடுக்கக்கூடாது’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை குறித்த மைதானம் அமைப்பது தொடர்பில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜெயவர்தன, நாட்டில் தற்போதுள்ள கிரிக்கெட் மைதானங்கள் முழுமையாக பயன்படுத்தப்படாத நிலையில், இலங்கைக்கு மேலும் ஒரு மைதானம் அவசியம் தானா என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
அத்துடன் இலங்கையில் இருக்கும் மைதானங்களில் சர்வதேச மற்றும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள் கூட இடம்பெறுவதில்லை என்றும் அவர் தனது டுவிட்டர் பதிவில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.