திருமண நிகழ்வில் கலந்து கொள்பவர்கள் விசேட நடைமுறைகளைப் பின்பற்றவேண்டுமென சுகாதார அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.
கொவிட்-19 கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக திருமண வைபவங்கள் மற்றும் விசேட நிகழ்வுகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் திருமண நிகழ்விற்கு அழைக்கப்படுவோரினது எண்ணிக்கை 100 பேருக்குள் வரையறுக்கப்பட வேண்டும் என சுகாதார அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன், திருமண வைபவங்களை ஏற்பாடு செய்யும் பொழுது அதற்கென திருமணம் நடைபெறும் பிரதேசத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரியின் அனுமதியை பெறவேண்டும்.
மேலும், திருமண வைபவம் மற்றும் அனைத்து வைபவங்களும் சுகாதார அமைச்சின் மூலம் வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டலுக்கு அமைவாகவே நடைபெற வேண்டும் என சுகாதார அமைச்சின் உணவுப் பாதுகாப்பு பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் லக்ஷ்மன் கம்லத் தெரிவித்துள்ளார்.
மேலும், வைபவங்களின் போது முகக்கவசம் அணிவதும் அவசியம் என்றும் 40 வீத இருக்கைகளைக் கொண்ட திருமண மண்டபங்களுக்கே விருந்தினர்களை அழைக்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
புதிய வழிகாட்டுதல்களின் கீழ் மணமக்கள் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிந்திருப்பதுடன், விருந்தினர்கள் ஒவ்வொருவருக்கும் இடையில் ஒரு மீற்றர் இடைவெளி பேணப்பட வேண்டும்.
மேலும் கட்டி அணைப்பது மற்றும் கைகுலுக்க அனுமதி இல்லை என்பதுடன், குழுப் புகைப்படங்கள் எடுப்பதற்கும் அனுமதிக்கப்பட மாட்டாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.