மெய்ப்பொருள் காண்பது அறிவு

சுமந்திரன் நேர்மையாக செயல்பட்டுள்ளார் – சம்பந்தன் பெயரில் கூற்று!

- Advertisement -

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள், ஒரு சின்ஹல ஊடகவியலாளருடன் மேற்கொண்ட நேர்காணலின் போது, தமிழ் ஈழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அரசியல் மற்றும் ஆயுத போராட்டத்தை “ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை,” என்று கருத்து தெரிவித்தார்.

சென்ற திங்கட்கிழமை அன்று திரு சம்பந்தன் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்த நிலையில், இன்று வெளியான அறிக்கை குறித்து மக்கள் குழப்பத்தில் உள்ளனர்.

- Advertisement -

திரு சம்பந்தன் சார்பாக செயல்படுவது சுமந்திரான் என்று மக்கள் மத்தியில் பரவலான கருத்து உள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அந்த சர்ச்சைக்குரிய நேர்காணலில், அந்த ஊடகவியலாளர் இவ்வாறு கேள்வி எழுப்பி இருந்தார்:

சமுதித: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் யார் என்பதை தெளிவாக கூறுங்கள்? சம்பந்தனா அல்லது சுமந்திரனா?

சுமந்திரன்: சம்பந்தன் தான்.

சமுதித: அது வெளியில் உலகிற்ற்கு காட்டப்படும் விடயம். நான் கேட்ப்பது உண்மையான தலைவர் யார்?

சுமந்திரன்: உண்மையான தலைவர் சம்பந்தன் அவர்கள் தான்.

சமுதித: இல்லை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நிர்வாகிப்பது எம்.ஏ. சுமந்திரன் என நேரடியாக கூறினால்?

சுமந்திரன்: நான் அதை ஏற்றுக்கொள்ள போவதில்லை. அதனை மறுதளிக்கின்றேன். நான் தலைமைத்துவத்திற்கு அழுத்ததை பிரயோகிக்கும் போது. அதாவது……

சமுதித: நீங்கள் தலைமைத்துவத்திற்கு அழுத்தம் கொடுக்கின்றீர்கள்?

சுமந்திரன்: சம்பந்தன் அவர்கள் என்னுடன் அனைத்து விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடி ஆலோசனைகளை பெற்றுக்கொண்டுதான் செயற்ப்பட்டுகின்றார்.

சமுதித: அப்படியென்றால் உத்தியோகபூர்வமற்ற தலைவர் என உங்களை கூறமுடியுமா?

சுமந்திரன்: அப்படி இல்லை. சில சமயங்களில் நான் கூறும் ஆலோசனைகளை அவர் ஏற்றுக்கொள்வதில்லை. அவர்தான் இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வார்.

சம்பந்தனின் பெயரில் வெளிவந்த கருத்து இதோ: 

“முன்னாள் யாழ்ப்பாண மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான சனாதிபதிச் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனினால் ஊடகங்களுக்கு வழங்கப்பட்டதாகக் கூறப்படும் பேட்டியொன்றின்மீது எனது கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.

பிரிக்கப்படாத, பிரிக்கமுடியாத ஒரே இலங்கைக்குள் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முறியடிக்கும் உள்நோக்கத்தோடும் இந்த நாட்டு மக்கள் மத்தியில், அதிலும் குறிப்பாகத் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஒற்றுமையின்மையையும் எற்படுத்தும் நோக்கத்தோடும் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிப்பதில் சுமந்திரன் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டுள்ளார்.

இந்திய – இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு அரசியலமைப்பிற்கான 13 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பல்லின, பல்கலாசார, பன்மைத்துவ சமூகமொன்றின் தேவைகளைப் பூர்த்தி செய்யுமுகமாக கணிசமானளவு கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் கொண்டுவருவதற்காக அடுத்தடுத்துப் பதவிக்கு வந்த சனாதிபதி ஆர் பிரேமதாச, சனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சனதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்தின்கீழ்; பெருமளவு பணிகள் செய்யப்பட்டுள்ளன. இவையனைத்தும் பதிவான விடயங்களாகும்.

எம்.ஏ. சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை எற்படுத்தும் நோக்கம் கொண்டவையாக உள்ளன. இப்பேட்டியின் நோக்கம் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் ஆகிய அனைவர் மத்தியிலும் தற்போது நடைபெற்று வரும் நடைமுறையை குழப்புவதாகும். அத்தகைய தீய முயற்சிகளினால் மக்கள் குழப்பமடையவும் தவறாக வழிநடத்தப்படவும் கூடாது.

1949 ஆம் ஆண்டு தொடங்கி 70 ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கும் தமிழ் அரசியல் போராட்டம் போன்ற சமத்துவத்திற்கும் நீதிக்குமான ஒரு நீண்ட அரசியல் போராட்ட வரலாற்றின்போது பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன. தமிழர் போராட்டம் தொடங்கியபோது அது ஜனநாயக ரீதியானதாகவும் சமாதான வழியிலானதாகவும் வன்முறையற்றதாகவுமே இருந்தது. ஜனநாயக வழியிலானதும், சமாதானமானதும் வன்முறையற்றதுமான தமிழர் போராட்டம் தொடங்கி ஒரு 30 ஆண்டு காலப்பகுதியின் பின்னர் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் (எல்ரீரீஈ) 70 களின் பிற்பகுதியிலும் 80 களின் தொடக்கத்திலும் தமது ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

முதல் மூன்று தசாப்தங்களின்போது தமிழர் பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வு காணப்பட்டிருப்பின், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபோதும் தோன்றியிருக்காது. அகிம்சை வழியில் பற்றுறுதி கொண்டிருந்த தமிழ்த் தலைவர் எஸ்.ஜே.வீ. செல்வநாயகத்தோடு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளையும் ஒப்பந்தங்களையும்; பெரும்பான்மை இனத் தலைவர்கள் அமுல்படுத்தத் தவறிமையே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாவதற்கு வழிவகுத்தது. 2009 ஆம் ஆண்டுவரை நீடித்த ஆயுதப் போராட்டக் காலத்திலும்கூட அமைதிவழி தமிழர் போராட்டம் தொடர்ந்தது; இன்னும் தொடர்கிறது.

நீதி மற்றும் சமத்துவத்தின் அடிப்படையில் எதிர் காலம் எவ்வாறு அனைத்து மக்களுக்கும் ஒளிமயமானதாக அமையக்கூடும் என்பதை இந்நாட்டு மக்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். நீதியானதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதுமான தீர்வொன்றையே தனது இறுதியான ஆர்வமாகக் கொண்டுள்ள சுமந்திரன் அந்தக் கண்ணோட்டத்திலிருந்தே வினாக்களுக்கு விடையளித்துள்ளார். சில விடயங்கள்மீது அவர் தனது சொந்தக் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்.

நீதி, சமத்துவம், சுயமரியாதை மற்றும் கௌரவம் ஆகியவற்றின் அடிப்படையிலான தீர்வொன்றின்மூலம் ஏற்படுத்தப்படும் நிரந்தர சமாதானத்தின் அடிப்படையில் தேசியப் பிரச்சினை தீர்த்து வைக்கப்பட்டால் மாத்திரமே இலங்கைக்கும் அதன் அனைத்து மக்களுக்கும் முன்னேற்றமும் செழிப்பும் ஏற்பட முடியும்.

அத்தகைய தீய முயற்சிகளினால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாமெனவும் பெரும் கருத்தொருமைப்பாட்டின் அடிப்படையில் தேசியப் பிரச்சினைக்கு நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமான தீர்வொன்றைக் காணும் முயற்சியின்மீது கவனத்தைச் செலுத்துமாறு சிங்களவர், தமிழர் மற்றும் ஏனைய அனைத்து இனத்தவர்கள் ஆகிய அனைத்து மக்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.

தற்போது தேசியப் பிரச்சினைக்கான தீர்வுடன் நேரடியாகத் தொடர்புபடாத விடயங்கள்மீது முரண்பாடான கருத்துக்களை வெளியிடுவதற்குப் பதிலாக, இத்தகையதொரு நிலைப்பாட்டின் பின்னால் ஒன்றுபட்டு நிற்பதிலேயே நியாயமானதும் ஏற்றுக்கொள்ளத்தக்கதுமானதொரு தீர்வினை அடைவதற்கான எமது வலிமை தங்கியுள்ளது என்பதை வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களுக்கு நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் பல வழிகளிலும் பெருமளவில் துன்பம் அனுபவித்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெறுவதற்கு முன்னரும் தமிழ் மக்கள் இன அழிப்பிற்கு ஆளாகியிருந்தனர். ஒரு பெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளனர். தமக்கு நிகழ்ந்தவற்றைத் தமிழ் மக்கள் தவிர்க்கமுடியாதவாறு வேதனையோடு நினைவுகூர்வர். எனினும் முக்கிய பிரச்சினை தொடர்பிலான அவர்களது சிந்தனையோட்டத்தை இது சிதறடித்துவிடக்கூடாது.

தேசியப் பிரச்சினைக்கான ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு தீர்வு மாத்திரமே தமிழ் மக்களுக்கு நிரந்த சமாதானத்தையும் நிம்மதியையும் முழு நாட்டிற்கும் அதன் அனைத்து மக்களுக்கும் நிரந்தர சமாதானத்தையும் செழிப்பையும் வழங்கும். இக்குறிக்கோளை அடைவதற்காக ஒற்றுமையாகப் பாடுபடுவது ஒவ்வொரு பிரசையினதும் கடமையாகும்.

ஆர் சம்பந்தன்,

தலைவர், தமிழ் தேசிய கூட்டமைப்பு

 

 

தொடர்புபட்ட செய்திகள்

Related News

இந்தியாவில் கொரோனா தொற்றின் அதிகரிப்பு!

இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான சுமார் 7 ஆயிரம் பேர் இன்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளான 6 ஆயிரத்து 957 பேர் இன்று அடையாளம் காணப்பட்டதாக இந்திய மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதேவேளை  இந்தியாவில்...

20 ஆவது திருத்தத்திற்கு எதிராக 6 மனுக்கள் தாக்கல்!

நாடாளுமன்றித்தில் முன்வைக்கப்பட்டுள்ள 20 ஆவது அரசியலமைப்பு திருத்த  சட்டமூல வரைபிற்கு எதிராக மேலும் 6 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. குறித்த, மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் இன்று  தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதேவேளை, 20  ஆவது அரசியலமைப்பு திருத்த...

20 ஆவது திருத்தத்திற்கு எதிரான மனுக்களை ஆராயும் குழு நியமனம்!

20 ஆவது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை ஆராய்வதற்காக ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, குறித்த குழு பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையில் நியமிக்கப்பட்டுள்ளது. இதன்படி, புவகேன அலுவிகாரே,...

Glasgow பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கொரோனா உறுதி…

ஸ்கொட்லாந்தின் Glasgow பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் 172 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் 600 பேர் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். இந்த நிலையில் குறித்த மாணவர்களுள் 172 பேருக்கு...

உங்களுக்கு மாற்று யாரும் கிடையாது- டி. இமான்….

தமிழ் சினிமாவின் பாடகர் டி.இமான் "நாங்கள் அனைவரும் உங்களை இழக்கின்றோம்" என தனது ஆழ்ந்த இரக்கங்களை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். We Miss You SPB Sir.#Annaatthe#RIPSPB pic.twitter.com/08gNLOsUsO — D.IMMAN (@immancomposer) September...

Developed by: SEOGlitz