நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக சில பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீர்பாசன திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, களு கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், இரத்தினபுரி மற்றும் மில்லகந்த ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் களனி கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ள காரணத்தினால் நோர்வூட் மற்றும் ஹொலம்புவ ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, ஜின் கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில் தவலம பகுதிக்கும், மஹாவலி கங்கையின் நீர்மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் நாவலபிட்டிய பகுதிக்கும் இவ்வாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நில்வள கங்கையின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், பானதுகம, பிட்டபெத்தர மற்றும் உரவ ஆகிய பகுதிகளுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொத்மலை ஓயாவின் நீர்மட்டம் அதிகரித்துள்ள நிலையில், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் உயர்வடைந்துள்ளது.
இந்த நிலையில், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் மூன்று வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
இதனால், மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தை அண்டிய பிரதேசங்களில் வாழும் மக்கள் மிகவும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.