ஓய்வூதியத் திணைக்கள ஊழியர்கள் தமது வீடுகளில் இருந்தவாறு கடமைகளை மேற்கொள்வதற்கு இணையத்தளம் மூலமான புதிய செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக வீட்டிலிருந்து பணியாற்றும் அரசாங்கத்தின் செயற்திட்டத்திற்கு அமைவாக ஓய்வூதியத் திணைக்களம் இந்த முறைமையை ஆரம்பித்துள்ளது
அரசாங்கத் தகவல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, வீடுகளில் இருந்தவாறு கடமைகளை மேற்கொள்ளும் செயற்பாடுகள் இணையதளத்தில் சேர்க்கபட்டமை தொடர்பான சுற்றறிக்கை ஒன்றையும் ஓய்வூதிய திணைக்களம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, ஓய்வுபெற்ற இலங்கை இராணுவ அதிகாரியின் தரவுகள் முதலாவது விண்ணப்பமாக இந்த கட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், தகவல் தொடர்பாடல் மற்றும் தொழில்நுட்ப முகாமைத்துவ சபையில் உறுப்பினர், ஓய்வூதிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ஓய்வூதிய திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம், ஓய்வூதிய திணைக்கள அதிகாரிகள் மற்றும் இலங்கை இராணுவத்தின் ஓய்வூதிய பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் meet.gov.lk எனும் இணையத்தள முகவரி ஊடாக விண்ணப்பித்துள்ளனர்
குறித்த வேலைத் திட்டத்திற்கமைய தற்போது 500இற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பல்வேறு நிறுவனங்களினால் ஓய்வூதிய திணைக்களத்தின் இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், ஓய்வூதிய திணைக்களத்தின் பணியாளர்கள் வீடுகளில் இருந்தவாறு விண்ணப்பங்களை பரிசோதிக்கும் பணிகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.