உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தினாரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் அடிப்படையில் மதுரங்குளி பகுதியில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.
கல்பிட்டி பகுதியைச் சேர்ந்த தொண்டு நிறுவனமொன்றின் காப்பாளர் ஒருவர் நேற்று மாலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
இதேவேளை குறித்த சந்தேக நபரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை முன்னெடுப்பதற்கான நீதிமன்ற அனுமதி கோரப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் இந்த கோரிக்கை முன்வைக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் கைது செய்யப்பட்ட பகுதியில் இருந்து புத்தகங்கள் உள்ளிட்ட மேலும் சில ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சூத்திரதாரிகள் இருவரை அழைத்துவந்து பிரிதொரு குழுவொன்றுக்கு அடிப்படைவாத பிரச்சாரங்கள் மற்றும் ஆயுதப் பயிற்சி ஆகியவற்றை வழங்குவதற்கு குறித்த சந்தேகநபர் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் மதுரங்குளி பகுதியில் நடாத்திச் செல்லப்பட்ட குறித்த அமைப்பின் அலுவலகம் அமைந்துள்ள பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.