விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரை முகாம்களுக்கு மீண்டும் அழைத்துவருவதற்காக நாடளாவிய ரீதியில் இன்று ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களிலும் இன்று காலை ஊரடங்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், விடுமுறையில் சென்றுள்ள முப்படையினரை முகாம்களுக்கு மீண்டும் அழைத்துவருவதற்காக அந்த ஊரடங்கு நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களிலும் நாளை காலை 5 மணி முதல் இரவு 8 மணிவரை ஊரடங்கு தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னர், குறித்த மாவட்டங்களில் மே மாதம் முதலாம் திகதி வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை மட்டுமே ஊரடங்கு அமுலில் இருக்கும்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தாலும், அரச மற்றும் தனியார் துறையினரின் செயற்பாடுகளை மே மாதம் 4ஆம் திகதி ஆரம்பித்து செயற்படுத்தும் வகையில் உரிய சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன.
அத்துடன், சேவைகளுக்கு சமூகமளிக்க வேண்டியவர்கள் தவிர்ந்த ஏனையோர் வீடுகளிலேயே இருப்பது அவசியம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
உணவு மற்றும் மருந்துகள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மற்றும் அவசியமான உணவுப் பொருட்கள் ஆகியவற்றை கொள்வனவு செய்ய மாத்திரமே பொதுமக்கள் வெளியில் செல்ல முடியும் என்பதுடன், அவ்வாறான தேவைகளுக்காக தமது பிரதேசத்தில் காணப்படுகின்ற நடை தூரத்தில் உள்ள விற்பனை நிலையங்களை மாத்திரமே தெரிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய வீட்டில் இருந்து வெளியில் செல்ல தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் படி மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.