குவைட் நாட்டில் தங்கியிருப்பதற்கான கால அவகாசத்தை தொடர்ந்தும் இலங்கைப் பிரஜைகளுக்கு வழங்குமாறு அந்த நாட்டு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் திணேஷ் குணவர்தன, இலங்கைக்கான குவைட் தூதுவரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
அத்துடன், வீசாக் காலம் நிறைவடைந்த நிலையில் குவைட்டில் தங்கியுள்ள இலங்கைப் பிரஜைகளுக்கான பொது மன்னிப்புக் காலத்தை தொடர்ந்தும் வழங்குவது குறித்து மீள் கவனம் செலுத்துமாறும், எந்தவித அபராதமும் இன்றி அவர்களை வெளியேற்றுமாறும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் அந்த நாட்டு அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையிலேயே, இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
குவைட் நாட்டில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பொதுமன்னிப்புக் காலம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையிலேயே, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குவைத்தில் தங்கியுள்ள இலங்கையர்களுக்கு உணவு மற்றும் தேவையான உதவிகளை வழங்குவதற்கு குவைத் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவிக்கின்றது
இந்த நிலையில், உதவிகள் தேவைப்படுவோர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அறியத்தருமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளர்.