கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் ஊள்ள ஊரடங்கு சட்டம் மே மாதம் 4ஆம் திகதி அதிகாலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், 27ஆம் திகதி, திங்கட்கிழமை அதிகாலை 5 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8 மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்பட உள்ளது.
இதன் பின்னர், குறித்த மாவட்டங்களில் மே மாதம் முதலாம் திகதி வரை இரவு 8 மணி முதல் அதிகாலை 5 மணிவரை மட்டுமே ஊரடங்கு அமுலில் இருக்கும்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருந்தாலும், அரச மற்றும் தனியார் துறையினரின் செயற்பாடுகளை மே மாதம் 4ஆம் திகதி ஆரம்பித்து செயற்படுத்தும் வகையில் உரிய சட்டங்கள் தளர்த்தப்பட்டுள்ளன.
திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள், தனியார் துறையினரின் தொழிற்சாலைகள், கட்டுமானத்துறை, சேவை நிலையங்கள், மரக்கறி, மீன் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள் ஆகியவற்றை நடத்திச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், தனியார் துறை நிறுவனங்களை திறக்கும் நேரமாக காலை 10 மணி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அரச மற்றும் தனியார் துறையினரின் நிறுவன பிரதானிகள், தமது நிறுவனங்களை மே 4ஆம் திகதி முதல் நடத்திச் செல்லும் முறை குறித்து அடுத்த வாரம் தீர்மானிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்கள் தமது ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கு ஊழியர்களை மாத்திரமே சேவைக்கு அழைக்க முடியும்.
மேலும், தமது நிறுவனத்தை நடத்திச் செல்ல அவசியமான குறைந்த அளவான ஊழியர்களை மட்டுமே அழைக்க வேண்டியது நிறுவன பிரதானிகளின் கடடையாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அனைத்து அரச நிறுவனங்களிலும் சேவைக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் வீட்டில் இருந்து தமது கடமைகளை முன்னெடுக்க வேண்டும்.