கொரோனா தொற்று அபாயவலயங்களாக பெயரிடப்பட்டுள்ள பகுதிகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டத்தினை தற்காலிகமாக தளர்த்துவது தொடர்பில் அரசாங்கம் தொடர்ந்தும் அவதானம் செலுத்தியுள்ளது.
குறித்த மாவட்டங்களில் தற்போதைய சுகாதார நிலைமைகளை கருத்திற்கொண்டு அதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்ற நிலையில், ஊரடங்கு தளர்வு குறித்து மேலும் ஆராயப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் ஊரடங்கு சட்டத்தினை இலகுபடுத்தல் தொடர்பான ஜனாதிபதியின் பரிந்துரைகள் மற்றும் விதிமுறைகள் அடங்கியுள்ள அறிவித்தல் வெளியிடப்படுமெனவும் எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
அத்துடன் கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் கேகாலை மாவட்டத்தின் வரக்காபொல பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் கண்டி மாவட்டத்தின் அலவத்துகொட பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் அம்பாறை மாவட்டத்தின் அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளில் அமுலில் உள்ள ஊரடங்கு எதிர்வரும் 27 ஆம் திகதி தளர்த்தப்டவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவித்தல் ஒன்றிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கமைய, எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 5 மணிக்கு தற்காலிகமாக ஊரடங்கு சட்டமானது தளர்த்தப்படவுள்ளது.
இதேவேளை, ஏனைய மாவட்டங்களில் நேற்று இரவு 8 மணி முதல் அமுலில் உள்ள ஊரடங்கு எதிர்வரும் 27 ஆம் திகதி காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
இவை தவிர கொழும்பு கம்பஹா களுத்துறை புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்நுழைதல் மற்றும் வெளியேறுதல் நடவடிக்கைகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது
மேலும், மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, அத்தியாவசிய தேவைகளை முன்னெடுக்க கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மாதம் 20 ஆம் திகதி முதல் நாடளாவிய ஊரடங்கு அமுல்ப்பட்டத்தப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில் நாட்டு மக்கள் ஊரடங்கு சட்டவிதிகளை முறையாக கடைபிடிப்பதோடு, சுகாதார ஆலோசனைகளை கண்டிப்பாக பின்பற்றுமாறும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.