நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக, தேசிய தொற்றுநோய் தடுப்புப் பிரிவு சற்றுமுன்னர் தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 735 ஆக அதிகரித்துள்ளது.
நேற்றைய தினம் மேலும் 66 பேர் அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
இவர்களில் 19 பேர், கட்டாரில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு அம்பாறை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், குவைத்தில் இருந்து நாட்டுக்கு அழைத்துவரப்பட்டு மின்னேரிய தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவரும், திருகோணமலை தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த ஒருவரும் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மேலும், நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்ட 52 பேரில் 31பேர் கடற்படையினர் எனவும், அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, முழங்காவில் தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த 19 பேரும், கந்தகாடு தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த 4 பேரும், மிஹிந்தலை தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த 4 பேரும், ஏனைய தனிமைப்படுத்தல் நிலையத்தைச் சேர்ந்த 4 பேரும் நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.