தம் மீது பொய்க் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இந்த மாதத்திற்கான ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பொன்றின் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.
வருமானம் இழந்த மக்களுக்காக வழங்கப்படுபகின்ற நிவாரணத்தில் இந்த மாதத்திற்கான ஐயாயிரம் ரூபா கொடுப்பனவு ஐக்கிய மக்கள் சக்தியின் கோரிக்கைக்கு இணங்க அல்லது வேறு எதிர்க் கட்சியொன்றின் கோரிக்கைக்கு இணங்க நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் எம்மீது குற்றச்சாட்டை முன்வைப்பதற்கு முனைகின்றது. தேர்தல் ஆணையாளருக்கு அழுத்தம் கொடுத்து வருமானம் இழந்து காணப்படுகின்ற லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வழங்கப்படுகின்ற நிவாரணத்தை நாம் இடைநிறுத்தியுள்ளேம் என்ற விம்பத்தை ஏற்படுத்தி அவர்கள் அதிலிருந்து தப்பிக் கொள்வதற்கு முயல்கின்றார்கள். குறிப்பாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் பந்துல குணவர்தன எந்தவித வெட்கமும் இன்றி தமது இயலாமையை மறைத்துக் கொள்ள இதை எம்மீது சுமத்துகின்றார்கள்.ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பான பிரதிநிதிகள், பிரதேச சபைத் தலைவர்கள் மற்றும் அவர்களுக்குத் தேவையான நபர்களை தலைவர்களாக நியமித்து, ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை அவர்கள் வழங்குவதைப் போன்று மாற்றுகின்றார்கள். தேர்தல் இடம்பெறவுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசியல் லாபத்தைப் பெற்றுக் கொள்வதற்கு இவ்வாறு இடமளிக்க வேண்டாம் என்றே நாம் தேர்தல்கள் ஆணையாளரிடம் கேட்டுக் கொண்டோம்.