ஹோமாகமை – தியகம பகுதியில் சர்வதேச கிரிக்கட் மைதானம் அமைப்பது தொடர்பான நடவடிக்கை குறித்து SRILANKA CRICKET நிறுவனம் தெளிவுபடுத்தல்களை வெளியிட்டுள்ளது
சுமார் 60 ஆயிரம் பேர் அமரக் கூடிய வகையில் அமைக்கப்படவுள்ள குறித்த மைதானத்தின் நிர்மாணப் பணிகளை 3 வருடங்களில் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக SRILANKA CRICKET தெரிவித்திருந்தது
இருப்பினும் தற்போது காணப்படும் மைதானங்களில் உள்ளூர் மற்றும் சர்வதேச போட்டிகள் போதுமான அளவு விளையாடப்படாத நிலையில், புதியதொரு மைதானம் அமைக்கப்படுவதன் அவசியம் தொடர்பில் இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் மஹேல ஜயவர்தன உள்ளிட்ட பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்
இந்த நிலையிலேயே, SRILANKA CRICKET நிறுவனம் விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது
இதன்படி, தற்போது நடாத்தப்படும் கிரிக்கட் விளையாட்டை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
மேலும் கிரிக்கட் விளையாட்டுக்கான ஆர்வம் அதிகரித்து வருகின்ற நிலையில், கொழும்பை அண்மித்த பகுதியில் சர்வதேச கிரிக்கெட் அரங்கை நிர்மாணிப்பதற்கான அவசியம் ஏற்பட்டுள்ளதாக SRILANKA CRICKET நிறுவனம் குறிப்பிட்டுள்ளது
இதேவேளை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு முதல் 2031 ஆம் ஆண்டு வரை நடைபெறவிருக்கும் இரண்டு ICC உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளை இலங்கையில் நடத்துவது தொடர்பான ICC யின் கோரிக்கைக்கு SRILANKA CRICKET நிறுவனம் ஆர்வம் காட்டியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது