கொரோனா பரவல் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை இயல்பு நிலையை திரும்பச் செய்யும் நோக்கில் நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று அதிகாலை 5 மணி முதல் ஊரடங்கு தற்காலிகமாக தளர்த்தப்பட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, புத்தளம் மற்றும் களுத்துறை ஆகிய 4 மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய 21 மாவட்டங்களிலேயே இவ்வாறு ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த 21 மாவட்டங்களில் இன்று அதிகாலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம், மீண்டும் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
இந்த நடைமுறையின் அடிப்படையில், எதிர்வரும் 6 ஆம் திகதிவரை வரும் மூன்று நாட்களுக்கு, இதேபோன்று காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு மீண்டும் அன்றைய நாளில் இரவு 8 மணிக்கு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதேவேளை, குறித்த 21 மாவட்டங்களிலும் 6 ஆம் திகதி இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி வரை அமுலில் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய நான்கு மாவட்டங்களிலும் தற்போது அமுலில் உள்ள ஊரடங்கு சட்டமானது எதிர்வரும் மே 11 ஆம் திகதி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்குமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பொலிஸாரினால் வழங்கப்பட்டுள்ள ஊரடங்கு அனுமதிப் பத்திரமானது, சாரதிகள் மற்றும் வாகனங்களில் பயணம் செய்வோர் முகக் கவசங்கள் அணிந்திருந்தால் மட்டுமே செல்லுபடியாகும் எனவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.