நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 705 ஆக அதிகரித்துள்ளது
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மேலும் 3 பேர் இன்று அடையாளங் காணப்பட்டதையடுத்தே, இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது
அத்துடன், கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த 172 பேர் இதுவரை குணமடைந்துள்ளதுடன், 526 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன்படி, தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் 133 பேரும், வெலிக்கந்த ஆதார வைத்தியசாலையில் 51 பேரும், கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலையில் 78 பேரும், இரணவில வைத்தியசாலையில் 17 பேரும், காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் 59 பேரும், இராணுவ வைத்தியசாலையில் 140 பேரும், ஹோமாகமை ஆதார வைத்தியசாலையில் 33 பேரும் கொரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொழும்பு மற்றும் களுத்துறை மாவட்டத்திலேயே அதிக அளவிலானவர்கள் கொரோனாதொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் 160 பேரும், களுத்துறை மாவட்டத்தில் 65 பேரும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், புத்தளம் மாவட்டத்தில் 41 பேரும், கம்பஹா மாவட்டத்தில் 53 பேரும், யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 16 பேரும், குருணாகலை மாவட்டத்தில் 27 பேரும்,
கண்டி மாவட்டத்தில்15 பேரும், அநுராதபுரம் மாவட்டத்தில் 12 பேரும், தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 41 பேரும், வெலிசறை கடற்படை முகாமில் இருந்து 217 பேரும், கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
அத்துடன், கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள சந்தேகத்தின் பேரில் 179 பேர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மே முதலாம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டில் 23 ஆயிரத்து 525 PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதன்படி, ஏப்ரல் 27ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட ஆயிரத்து 869 PCR பரிசோதனைகளே இதுவரை ஒருநாளில் இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட அதிக அளவு PCR பரிசோதனைகளாக காணப்படுகின்றன.
இந்த நிலையில், ஏப்ரல் 30 ஆம் திகதி ஆயிரத்து 397 PCR பரிசோதனைகளும், மே முதலாம் திகதி ஆயிரத்து 107 PCR பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.