நாட்டில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் மேலும் 559 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை மேலும் 205 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணிவரையான 24 மணிநேர காலப்பகுதியில் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் மாதம் 20 ஆம் திகதி மாலை 6 மணிதொடக்கம் இன்று காலை 6 மணிவரையான காலப்பகுதிக்குள் ஊரடங்கு சட்ட விதிமுறைகளை மீறி செயற்பட்டமை தொடர்பில் 55 ஆயிரத்து 706 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி பயணித்த குற்றச்சாட்டில் இதுவரையான காலப்பகுதியில் 15 ஆயிரத்து 216 வாகனங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கைது செய்யப்பட்டவர்களுள் 12 ஆயிரத்து 482 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதுடன் நான்காயிரத்து 808 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.