கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள காலகட்டத்தில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான செயற்திட்டத்தில் வங்கித் துறையை இணைத்துக் கொள்வது தொடர்பாக ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார்.
மத்திய வங்கி ஆளுநரின் தலைமையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் மத்திய வங்கியின் துணை ஆளுநர்கள், அரச மற்றும் தனியார் வங்கி பிரதானிகள், ஜனாதிபதி செயலாளர் பி.பி.ஜயசுந்தர ஆகியோருக்கிடையில் நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
வங்கித் துறையில் தற்போது எதிர்நோக்கப்படும் பிரச்சினைகள் குறித்தும் ஜனாதிபதி இந்த சந்திப்பில் அவதானம் செலுத்தியுள்ளார்.
இந்த நிலையில், கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக, வழக்கமான சிந்தனைகளுக்கு அப்பால் பங்களிப்பு நல்க வேண்டும் என வங்கித் துறையினரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆடைக் கைத்தொழில் மற்றும் சுற்றுலாத் துறை ஆகியன பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள இந்த காலப்பகுதியில், இறக்குமதிப் பொருளாதாரத்திற்கு பதிலாக, உற்பத்திப் பொருளாதாரத்தை நோக்கி, நாட்டை வழிநடத்த வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதற்காக வங்கித் துறையினர் பாரிய பங்களிப்பை வழங்க முடியும் என ஜனாதிபதி இதன்போது தெரிவித்தார்.
தேயிலை உள்ளிட்ட பெருந்தோட்டத்துறை, சிறிய மற்றும் நடுத்தர உற்பத்திகள், வீடு மற்றும் ஏனைய கட்டுமானப் பணிகள், விவசாயம் சார்ந்த பெறுமதி சேர்க்கப்பட்ட பயிர்களான இலவங்கப்பட்டை மற்றும் மிளகு போன்ற உற்பத்திகள் ஆகியவற்றுக்கு வங்கிகள் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும், இந்த துறைகளில் வணிகங்களைத் தொடங்குவதற்கான இலகு கடன்களை வழங்க வேண்டும் எனவும், வங்கித் துறையினரிடம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதனை அடுத்து, பொருளாதாரத்தை மேம்படுத்த அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக கலந்துரையாடலில் பங்கேற்ற வங்கி பிரதிநிதிகள் உறுதியளித்தனர்.
இதேவேளை, வங்கித் துறையினர் தாம் எதிர்கொள்ளும் சிக்கல்களை மத்திய வங்கியுடன் கலந்துரையாடி தீர்வு காணவும் இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது