கொழும்பு, கம்பஹா, களுத்தறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் இன்றைய தினமும் அதிகாலை ஐந்து மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ளது
இதற்கமைய, குறித்த மாவட்டங்களில் இன்று இரவு எட்டு மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது.
அத்துடன், இந்த மாவட்டங்களில் நாளை அதிகாலையும் ஐந்து மணிக்கு ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டு இரவு எட்டு மணிக்கு மீண்டும் அமுல்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, குறித்த மாவட்டங்களில் நாளை இரவு 8.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 11 ஆம் திகதி அதிகாலை ஐந்து மணிவரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது
இதேவேளை, ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட பகுதிகளில், தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி வெளியே செல்லும் நடைமுறை எதிர்வரும் 11 ஆம் திகதியிலிருந்தே அமுலாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, கொழும்பு, கம்பஹா, களுத்தறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில், தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி வெளியே செல்லும் நடைமுறை நேற்று முதல் அமுலாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையிலேயே, இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது
இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்தறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மறு அறிவித்தல் வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த மாவட்டங்களில் ஊரடங்கு அமுலில் உள்ள போதிலும், எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இது தொடர்பான அறிவுறுத்தல்கள் நிறுவனங்களின் பிரதானிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இதற்கமைய, தனியார் நிறுவனங்களை திறக்கும் நேரமாக காலை 10 மணி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அரச மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு வருகை தருகின்ற பணியாளர்களின் எண்ணிக்கையை, நிறுவனங்களின் பிரதானிகள் தீர்மானிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கொள்வனவுகள் மற்றும் மருந்து பொருட்களை கொள்வனவு செய்வதற்கு மாத்திரமே வெளியில் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.