அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு விடயத்தில் மோசடி செய்த கிராம உத்தியோகத்தர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர் ஒருவரே இவ்வாறு சேவை இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட குறித்த 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவை பயனாளிகளுக்கு வழங்கும் செயற்பாட்டில் ஆறு நபர்களின் போலிப்பெயர்களை பட்டியலில் உட்படுத்தி மோசடி செய்த குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே குறித்த கிராம உத்தியோகத்தர் ஒருவர் இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
இக்கிராம உத்தியோகத்தரின் மோசடி தொடர்பில் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலாளர் ஜே.எஸ்.அருள்ராஜ் மாவட்ட அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு வந்ததை அடுத்து மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாவட்ட செயலக பிரதம கணக்காளர் எஸ்.பரமேஸ்வரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் என்.பிரதீபன், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர் எஸ்.கே.டி.நெரன்ஞன் ஆகியோரடங்கிய குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப விசாரணை அறிக்கையின் அடிப்படையில் குறித்த கிராம உத்தியோகத்தரை மாவட்ட அரசாங்க அதிபர் இடைநிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.