நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை தொள்ளாயிரத்து 81 ஆக காணப்படுகின்றது.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 21 பேர் நேற்று அடையாளம் காணப்பட்ட நிலையிலேயே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
அவர்களில் இருவர் பிரித்தானியாவில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய, 19 பேரும் கடற்படையினர் எனவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்றுவந்த மேலும் 18 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.
இதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 538 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொரோனா தொற்றுக்கு உள்ளான 434 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதன்படி, குறித்த கொரோனா தொற்றாளர்கள், தேசிய தொற்றுநோய் வைத்தியசாலை, வெலிக்கந்த ஆதார வைத்தியசாலை, கொழும்பு கிழக்கு ஆதார வைத்தியசாலை, இரணவில வைத்தியசாலை, காத்தான்குடி ஆதார வைத்தியசாலை, இராணுவ வைத்தியசாலை, ஹோமாகமை ஆதார வைத்தியசாலை ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, கடந்த 22ஆம் திகதி முதல் இன்று வரையிலான காலப்பகுதியில் 673 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இதன்படி, கடற்படையினர் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பைப் பேணிய 576 பேரும், ஏனைய 97 பேரும் குறித்த காலப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, நாடளாவிய ரீதியில் கொரோனா தொற்றை கண்டறிவதற்காக, 43 ஆயிரத்து 137 பி.சி.ஆர். பரிசோதனைகள் இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.