அலுவலகங்களை திறந்து செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது, போக்குவரத்து சேவைகளை பயன்படுத்துவோர், விற்பனை நிலையங்கள் ஆகியோர் சுகாதார அறிவுறுத்தல்களை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
தொற்று நீக்கி பயன்படுத்துதல், முகக் கவசம் பயன்படுத்துதல், அடிக்கடி கைகளைக் கழுவுதல் மற்றும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் ஆகியவை இதில் உள்ளடங்கும்.
இந்த விதிமுறைகளை மீறுவோர் குறித்து பொலிஸ் மற்றும் பாதுகாப்புப் படையினரால் கடுமையான சோதனைகள் முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
பணிக்கு செல்வோர் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரமே, மாவட்டங்களுக்கு இடையிலான போக்குவரத்து, மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள் உள்ளிட்ட ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும் திரையரங்குகள் ஆகியன மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கும்.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் பகுதிகளில் ஏதேனும் பிரதேசங்கள் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டிருக்குமானால், அந்த பகுதிகளில் முழு நாளும் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்குள் உள்நுழைதல் மற்றும் வெளிச் செல்லல் முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து விதமான, களியாட்டங்கள், மத நிகழ்வுகள், சுற்றுலாக்கள், ஒன்றுகூடுதல், பெரஹர, கூட்டங்கள் ஆகியன மறு அறிவித்தல் வரை தடை செய்யப்பட்டுள்ளன.
மக்கள் ஒன்று கூடுகின்றமை கொரோனாவைக் கட்டுப்படுத்தும் செயற்பாடுகளுக்கு இடையூறாக அமையும் என்பதால் மத ரீதியான நிகழ்வுகளை ரத்து செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் ஆரம்பித்த சமயத்தில் இருந்து மக்களின் வாழ்க்கையை முன்னெடுத்து செல்லும் வகையில் அத்தியாவசிய பொருள் மற்றும் சேவை வழங்கல் நிகழ்வுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.