மெய்ப்பொருள் காண்பது அறிவு

முல்லைத்தீவில் அணைக்கட்டுக்கு நிதியளித்தது ஜோன் கீல்ஸ்!

- Advertisement -

முல்லைத்தீவில் 300 ஏக்கர் வயல் நிலத்துக்குப் பாசனம் செய்ய ஆறுவழி அணைக்கட்டுக்கு நிதியளித்தது ஜோன் கீல்ஸ்

 முல்லைத்தீவில் 7 ஆண்டுகள் நீடித்த வேள்ட் விஷனுடனான அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தையும் ஜோன் கீல்ஸ் ஃபவுண்டேஷன் பூர்த்திசெய்தது

- Advertisement -

வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் இரணைப்பாலையிலுள்ள நாவலடிவெளியில், கிட்டத்தட்ட 300 ஏக்கர் வயல் நிலத்துக்குப் பாசனம் செய்யும் கொள்திறனைக் கொண்ட ஆறுவழி அணைக்கட்டொன்றை, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் கூட்டாண்மைச் சமூகப் பொறுப்புப் பிரிவான ஜோன் கீல்ஸ் ஃபவுண்டேஷன், ஓகஸ்ட் 28, 2020 அன்று திறந்துவைத்தது.

ஜோன் கீல்ஸ் ஃபவுண்டேஷனின் கிராமத் தத்தெடுத்தல் செயற்திட்டத்தின் கீழான இறுதி முன்னெடுப்பாக நிர்மாணிக்கப்பட்ட இந்த அணைக்கட்டு, நீர் வளங்களைப் பாசனத்துக்காக அதியுச்ச அளவில் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டதோடு, சிறுபோக, பெரும்போகப் பருவங்களில் பயிர்ச்செய்கையில் ஈடுபடுவதற்கான நீரை, ஆண்டு முழுவதற்கும் வழங்குவதை உறுதிப்படுத்துகிறது.

இதன் மூலமாக, இரணைப்பாலையையும் அதைச்சூழவுள்ள பகுதிகளையும் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் பயனடையவுள்ளன.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இரணைப்பாலை கமக்காரர் சங்கத்தின் செயலாளர் திரு. ஜோன் அமரநாயகம், ’50 ஆண்டுகளாக எமக்குக் காணப்பட்ட குழப்பங்களுக்கு இது முடிவைக் கொண்டுவந்துள்ளதால், இம்முன்னெடுப்பானது எமக்கு மிகப்பெரும் மகிழ்ச்சியை வழங்குகிறது. 75,000 ரூபாயைச் செலவளித்து, கிட்டத்தட்ட 200 மண்மூடைகளை ஆண்டுக்குக் குறைந்தது மூன்று தடவைகள் அணையாக அமைத்து, கடலுக்கு நீர் திரும்பிச் செல்வதைத் தடுப்போம்.

இந்த அணைக்கட்டு மூலமாக ஒவ்வொரு விவசாயியும் ஆண்டுக்குக் குறைந்தது 250,000 ரூபாயை இலாபமாகப் பெற வழியேற்படும்” எனத் தெரிவித்தார்.

புதுக்குடியிருப்புப் பிரதேச செயலாளர் பிரிவில் இரணைப்பாலையிலும், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் புதுமாத்தளனிலும் தனது கிராமத் தத்தெடுத்தல் செயற்திட்டத்தை, வேள்ட் விஷனுடன் இணைந்து 2013ஆம் ஆண்டில் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை ஆரம்பித்திருந்தது.

நீண்டகாலம் நிலவிய சிவில் முரண்பாடு காரணமாகப் பாதிக்கப்பட்டதோடு, அம்முரண்பாட்டின் முடிவில் இறுதியாக மீளக்குடியமர்த்தப்பட்டதுமான இந்த இரண்டு கிராமங்களின் சமுதாயங்களில் அதிகம் பாதிக்கப்பட்டவையென அடையாளங்காணப்பட்ட அத்தியாவசியமான உட்கட்டமைப்பு, பேண்தகு வாழ்வாதாரங்கள், கல்விக்கான அணுக்கம், ஏனைய வாய்ப்புக்கள் ஆகியவற்றை விருத்திசெய்யும் நோக்கில், கணிசமான முதலீட்டை அவ்வறக்கட்டளை மேற்கொண்டிருந்தது.

அணைக்கட்டைக் கையளிக்கும் நிகழ்வில் கருத்துத் தெரிவித்த, ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பின் செயற்பாடுகளுக்கான பிரதானியான கார்மெலீன் ஜயசூரிய அம்மையார், ‘வேள்ட் விஷனின் பிரதிநிதிகளுடன் 2013ஆம் ஆண்டு பெப்ரவரியில் இரணைப்பாலைக்கும் புதுமாத்தளனுக்கும் நாம் முதலில் விஜயம் மேற்கொண்டபோது, தற்காலிகக் குடியிருப்புகள் சிதைவடைந்த படகுகளும் வலைகளும் நீர்ப்பாசனமில்லாத வயல் நிலங்கள் போதுமான நீர், கழிவகற்றல் வசதிகள், வகுப்பறை இடவசதியும் வசதிகளும் இல்லாத பாடசாலைகள் வருமானச் சவால்களாலும் சமூக வன்முறையாலும் பாதிக்கப்பட்ட பெண்களால் தலைமை தாங்கப்படும் ஏராளமான குடும்பங்கள் ஆகியவற்றையே நாம் கண்டோம்.

இருந்தாலும், நாம் சந்தித்த பல்வேறு வகையான சமுதாயக் குழுக்களில், நேர்முகமான மனித உணர்வையும் வெற்றியடைவதற்கான உறுதிப்பாட்டையும் நாம் கண்டோம். அச்சமுதாயத்துக்கு வீடமைப்பிலா, வாழ்வாதாரத்திலா உதவி தேவைப்படுகிறது என நாம் வினவியபோது, வாழ்வாதார உதவிகளால் கிடைக்கும் நீண்டகால நன்மைகளைக் கருத்திற்கொண்டு, வாழ்வாதாரத்தை அவர்கள் உடனடியாகத் தெரிவுசெய்தனர்.

இப்பகுதிகளில் எமது வாழ்வாதார, கல்வி முன்னெடுப்புகளால் ஏற்பட்டுள்ள மிகப்பாரியளவிலானதும் பரந்தளவிலானதுமான மாற்றங்களைப் பார்ப்பதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம். உண்மையிலேயே இது மனதுக்கு எழுச்சியூட்டுகிறது!” எனத் தெரிவித்தார்.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த வேள்ட் விஷன் லங்காவின் தேசிய பணிப்பாளர் கலாநிதி தனன் சேனாதிராஜா, ‘சமுதாயமொன்றுக்குத் தேவையான வசதிகளை வழங்கும்போது, சிறுவர்கள் தமது வாழ்க்கையை முழுமையாக அனுபவிப்பதற்குத் தேவையான வசதிகளை நீங்கள் வழங்குகிறீர்கள்.

ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையால் ஆரம்பிக்கப்பட்டு, நிதியளிக்கப்பட்டு, வேள்ட் விஷனால் அமுல்படுத்தப்பட்ட இச்செயற்திட்டம், முழுச் சமுதாயத்துக்கும் வாழ்வாதார ஆதரவையும் முக்கியமாக உணவுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துகிறது. பல தலைமுறைகளுக்கு நீடித்து நிற்கும் மாற்றத்துக்காக வழியை ஏற்படுத்தியமை குறித்து நாம் மகிழ்ச்சியடைகிறோம்” எனத் தெரிவித்தார்.

ஜோன் கீல்ஸ் ஃபவுண்டேஷனின் கிராமத் தத்தெடுத்தல் செயற்திட்டமானது தனது ஏழு ஆண்டுகாலப் பகுதியில் முல்லைத்தீவில் 100 மீனவர்களுக்குப் படகுகள், படகு இயந்திரங்கள், வலைகள், பாதுகாப்புக் கருவிகள், திறன் விருத்தி ஆகியவற்றை வழங்கியதோடு, பெண்களால் தலைமை தாங்கப்படும் 20 குடும்பங்களுக்குக் கறவைப் பசுக்களை வழங்கியிருந்தது.

இந்த இரண்டு குழுக்களும் செயற்திட்டத்தின் பயன்களைச் சமுதாயத்தின் ஏனையோருடனும் பகிர்ந்துகொண்ட நிலையில், அபிவிருத்திக்கான குறிப்பிடத்தக்களவு அதிர்வலை விளைவை ஏற்படுத்தியிருந்தது.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அணைக்கட்டுக்கு மேலதிகமாக, இரணைப்பாலையில் 200க்கும் மேற்பட்ட விவசாயிகளுக்குப் பயனளிக்கும் வகையில் 1.2 கிலோமீற்றர் நீளமான விவசாய வீதியை நிர்மாணித்து, அப்பகுதி விவசாயச் சமூகத்துக்கு ஆதரவளிக்கப்பட்டது.

குடும்பப் பலமளிப்பு நிகழ்ச்சித்திட்டமானது இலங்கைச் செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டதோடு, முரண்பாட்டால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 30 குடும்பங்களின் பொருளாதார, சமூக ஒருங்கிணைப்புக்கு ஆதரவளிக்கப்பட்டது.

பாடசாலைகளுக்கும் கல்விக்குமான உதவிகளைப் பொறுத்தவரை, இச்செயற்திட்டமானது முல்லைத்தீவு இரணைப்பாலை றோமன் கத்தோலிக்க மகா வித்தியாலயம், முல்லைத்தீவு மாத்தளன் றோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலை ஆகியவற்றுக்கு நீரும் கழிவகற்றலும், இரணைப்பாலைப் பாடசாலைக்கான அனைத்து வசதிகளும் கொண்ட கணினி ஆய்வுகூடம், மாத்தளன் பாடசாலைக்கான மீளப்புனரமைக்கப்பட்ட மழைநீர் சேகரிக்கும் தாங்கி, பாடசாலைச் சமையலறை போன்ற வசதிகளுடன், அத்தியாவசிய உட்கட்டமைப்புத் தேவைகள் பூர்த்திசெய்யப்பட்டதோடு மாத்திரமல்லாமல், ஆங்கில மொழிப் புலமைப்பரிசில்கள், க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் ஆகியவற்றில் முறையே 90 சதவீதம், 100 சதவீதச் சித்தி வீதங்களுக்கு வழிவகுத்த தயார்படுத்தல் வகுப்புக்கள் ஆகியவற்றின் மூலமாக திறன் அபிவிருத்திக்குமான வசதிகளையும் வழங்கியது.

ஏனைய முக்கியமான அபிவிருத்தி நடவடிக்கைகளில் மாத்தளனிலுள்ள மீனவச் சமுதாயத்துக்கான சமுதாய நிலையமொன்று, இரு கிராமங்களிலுமுள்ள இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல்களும் விளையாட்டு வசதிகளும், மீனவர்களுக்கும் விவசாயத்தில் ஈடுபடும் பெண்களுக்கும் இளைஞர்களுக்குமென தகைமை வளர்ப்பு, திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் ஆகியன உள்ளடங்குகின்றன.

புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் உள்ள பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவைப் புனரமைக்கவும் தரமுயர்த்தவும், பால்நிலை உணர்திறன் ஏற்படுத்தலுக்குமாக தி ஏஷியா அறக்கட்டளையுடன் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை இணைந்து செயற்பட்டிருந்தது.

அதேபோல், முல்லைத்தீவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரிவிலுள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களில் பயிற்சியளிப்பு, பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள், சிறுவர் துஷ்பிரயோகம் ஆகியவற்றைத் தடுப்பதற்கும் எதிர்கொள்வதற்குமான விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டங்களை அப்பகுதிச் சமுதாயங்களுக்கு நடத்தியமை ஆகியவற்றுக்கும், இரு நிறுவனங்களும் இணைந்து செயற்பட்டிருந்தன.

இரணைப்பாலை, முல்லைத்தீவில் அமைந்துள்ள ஆறுவழி அணைக்கட்டைப் பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர் திரு. கே. விமலநாதன், விவசாயத் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் திரு. புனிதகுமார், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு. எஸ். ஜெயகாந்த், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் எம். உமாமகள் அம்மையார் ஆகியோர் பங்குகொண்டனர்.

ஜோன் கீல்ஸ் குழுமம் சார்பாக குழுமத்தின் சொத்துப் பிரிவின் தலைவர் திரு. சுரேஷ் ராஜேந்திரா, சட்டம், செயலாண்மை, கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பின் பிரதானி நதீஜா தம்பையா அம்மையார், கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பின் செயற்பாடுகளுக்கான தலைவர் கார்மெலீன் ஜயசூரிய அம்மையார், யூனியன் அஷ்யூரன்ஸின் 4ஆவது தொகுதியின் விற்பனைத் தலைவர் திரு. கே. கோகிலன் ஆகியோர் பங்குகொண்டனர்.

வேள்ட் விஷன் லங்காவின் தேசிய பணிப்பாளர் கலாநிதி தனன் சேனாதிராஜா, சந்தைப்படுத்தலுக்கும் ஈடுபாட்டுச் செயற்பாடுகளுக்குமான பணிப்பாளர் திரு. கிளரன்ஸ் சுதர்சன் ஆகியோர் அவ்வமைப்புச் சார்பில் கலந்துகொண்டனர்.

இலங்கை நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் நிறுவனம், விரிவடைந்த 7 தொழிற்துறைகளில் 70க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயக்குவதோடு, இலங்கையின் மிகப்பெரிய பல்வகைப்படுத்திய பல்கூட்டு நிறுவனமாகும்.

உலகப் பொருளாதார மன்றத்தின் முழுமையான உறுப்புரிமையை ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்;ஸ கொண்டிருப்பதோடு, ஐ.நா பூகோள உடன்படிக்கையின் பங்குபற்றல் உறுப்பினராகும். ‘எதிர்காலத்திற்கான நாட்டினை கட்டியெழுப்புதல்” என்ற தனது கூட்டாண்மைச் சமூகப் பொறுப்புத் தூரநோக்கை, ஜோன் கீல்ஸ் நிறுவனம் தனது கூட்டாண்மைச் சமூகப் பொறுப்பு அமைப்பான ஜோன் கீல்ஸ் ஃபவுண்டேஷன் மூலமாக கல்வி, சுகாதாரம், சூழல், வாழ்வாதார அபிவிருத்தி, கலையும் கலாசாரமும், அனர்த்த நிவாரணம் ஆகிய ஆறு பிரிவுகள் ஊடாகச் செயற்படுத்துகிறது.

வேள்ட் விஷன் என்பது அபிவிருத்திக்கும் பரிந்துரை பேசலுக்குமான ஓர் அமைப்பாகும். இலங்கையின் 14 மாவட்டங்களில் 31 பிரதேசங்களில் செயற்படும் அவ்வமைப்பு, அதிக பாதிப்புக்குள்ளாகும் ஆபத்தைக் கொண்ட 100,000 சிறுவர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் தனது பங்களிப்பை வழங்கி வருகிறது.

தொடர்புபட்ட செய்திகள்

Related News

ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறியவர்கள் கைது!

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டவிதிமுறைகளை மீறி செயற்பட்ட குற்றச்சாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 152 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த...

அவுஸ்திரேலியாவில் முடக்கச் செயற்பாடுகளில் தளர்வு!

அவுஸ்திரேலியாவில் கொரோனா தடுப்பு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் இலகுபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி மெல்பர்ன் மற்றும் விக்டோரியா ஆகிய மாநிலங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேற்பட்ட காலப்பகுதியில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்தளவு...

உற்பத்திப் பொருட்களை புறக்கணிப்பதை நிறுத்துமாறு பிரான்ஸ் கோரிக்கை!

பிரான்ஸ், தனது நாட்டின் உற்பத்திப் பொருட்களை புறக்கணிக்கும் கோரிக்கையை நிறுத்துமாறு மத்திய கிழக்கு நாடுகளை வலியுறுத்தியுள்ளது. இந்த நிலையில், குவைத், ஜோர்தான், சிரியா மற்றும் காசா ஆகிய நாடுகளில் உள்ள சில கடைகளில் பிரான்ஸ்...

தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து மேலும் பலர் வெளியேற்றம்!

முப்படையினரால் நடாத்திச் செல்லப்படும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்துள்ள மேலும் 316 பேர் இன்று வெளியேற்றப்படவுள்ளனர். தனிமைப்படுத்தல் செயற்பாடுகளுக்குட்படுத்தப்பட்ட குறித்த அனைவரிடமுட் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பிரசோதனைகளில் தொற்று ஏற்படவில்லை என உறுதி...

கண்டியில் சிறுவனுக்கு கொரோனா தொற்று உறுதி!

கண்டி கலஹா பகுதியில்  15 வயதுடைய  சிறுவன்  ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த சிறுவன் தனது தந்தையுடன் பேலியகொடை மீன் சந்தைக்கு சென்றுவந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ள நிலையில்  மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் தொற்று ஏற்பட்டுள்ளமை...

Developed by: SEOGlitz